புதுச்சேரி:இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற நடைமுறை தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலில் உள்ளது, ஆனால் புதுவையில் இதுவரை கட்டாய ஹெல்மெட் திட்டம் இல்லாமல் இருந்தது.
சமீபத்தில், மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது, அதில், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
அதன்படி, புதுவையில் மே மாதம் 1-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்து இருக்கிறார்.
இந்த கட்டாய ஹெல்மெட் திட்டத்தின் மூலம் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது.
மே மாதம் 1-ந் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.