சென்னை: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அய்யன் கோவில் செல்லும் வழியில் குடியிருப்பு நிறைந்த பகுதியின் மத்தியில் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை நேற்று தொடங்கியது.
இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர், அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.
அப்போது, திருப்பூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், ஈஸ்வரி (45) என்ற பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார், அடி தாங்க முடியாத அந்த பெண் நிலைகுலைந்து போனார்.
பெண்ணின் கன்னத்தில் அறைந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்கள் மீது போலீசார் நடத்திய தடியடி குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.