புது டெல்லி:இந்தியாவில் தற்போது பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை, இவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய 5 நகரங்களில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்பட உள்ளது.
அதன்பின்னர், நாடு முழுவதும் விரிவுபடுத்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.