Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது: வைரமுத்து பேச்சு

$
0
0

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது கன்னடக் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேச்சு

சென்னைப் பல்கலைக் கழகக் கன்னட மொழித்துறையும், கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கில்’ கவிஞர் வைரமுத்து தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். கருத்தரங்க மலரை வெளிவிட்டு அவர் பேசியதாவது.

அரசியலும் மதமும் மனிதர்களைப் பிரிக்கின்றன. கலை இலக்கியம்தான் இதயங்களை இணைக்கிறது. ஆகவே இந்தக் கன்னட இலக்கியக் கலாசாரக் கருத்தரங்கை நான் வரவேற்கிறேன்.

தமிழர்களும் கன்னடர்களும் திராவிடக் கலாசாரத்தின் குழந்தைகள். கன்னட மொழி வடமொழியிலிருந்து பிறந்தது என்ற வாதம் ஆய்வுகளால் அடிபட்டுப் போய்விட்டது. தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது, காலப்போக்கில் கன்னடத்தில் வெவ்வேறு விகிதங்களில் வடமொழி வந்து கலந்து அதன் வடிவை மாறிப் பிறிதொரு மொழியாய்ப் பிரித்துவிட்டது என்பதை என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

காலங்காலமாகத் தமிழில் வழங்கிய பல சொற்கள் கன்னடத்தில் தமிழாகவே இன்னும் வழங்கி வருகின்றன. கை – கால் – கண் – அப்பா – தாய் – அக்கா – அண்ணன் – அறம் – மீன் – அறிவு இப்படிப் பல சொற்கள் ஒலிப்பு முறையிலும் பொருள் முறையிலும் தமிழிலும் கன்னடத்திலும் ஒன்றாகவே இயங்கி வருகின்றன.

கன்னடத்தில் ஞானபீடம் பரிசு பெற்ற மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் சீரங்கத்தில் பிறந்த தமிழர் என்பதை மறந்துவிடமுடியாது. அதேபோல் தமிழில் எழுதிப் புகழ்பெற்ற கவிஞர் ஞானக்கூத்தன் கர்நாடகத்தில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர்களும் கன்னடர்களும் தண்ணீர்ப் பறிமாற்றத்தில் முரண்பட்டதுண்டே தவிர, இலக்கியப் பரிமற்றத்தில் இடர்ப்பட்டதில்லை. கன்னடத்தின் அக்கமகாதேவியை வாசிக்கும் போதெல்லாம் தமிழ் ஆண்டாளின் காதல் குரல் எங்கள் காதில் விழுகிறது.

“கொழலினிது யாழினிது என்ப தம்மக்கள் தொதல் சொல் கேளாதவர்” என்று திருக்குறளைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துப் பரப்பியவர்கள் கன்னடச் சகோதரர்கள். அதுபோல ‘சர்வக்ஞர்’ என்ற கன்னட ஞானியைத் தமிழில் மொழிபெயர்த்து மகிழ்ந்தவர்கள் தமிழர்கள். அதனால்தான் திருவள்ளுவருக்குக் கர்நாடகத்திலும், சர்வக்ஞருக்குச் சென்னையிலும் சிலையெடுத்துப் பண்பாட்டுப் பரிமாற்றம் செய்துகொண்டோம்.

இப்படிக் கொடுக்கல் வாங்கல் என்ற மரபு நமக்கிடையே புதிதல்ல. கரிகால் சோழன் தன் மகளை கங்க வம்சத்தில் பிறந்த கன்னட மன்னன் ஸ்ரீவிக்கிரமனுக்கு மணம் செய்து கொடுத்தான். அப்படிப் பார்த்தால் தமிழர்களும் கன்னடர்களும் சம்பந்திகள் ஆகிறார்கள். ஆகவே எங்களுக்குத் தேவையான காவிரி நீரை சம்பந்தி உறவுப்படியும் கேட்கிறோம், சட்ட உரிமைப்படியும் கேட்கிறோம். எனவேதான் மேகதாதுவில் கல்லால் அணை கட்டாதீர்கள்; சொல்லால் பாலம் கட்டுவோம் வாருங்கள் என்கிறோம்.

அரசியல் தடுக்கிறது; இலக்கியம் கொடுக்கிறது. எனவே பிரச்சனைகளை அரசியல் மூளையோடு அணுகாமல், இலக்கிய இதயத்தோடு அணுகுவோம். இந்தக் கருத்தரங்கு தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே கலாசாரப் பாலம் கட்டும் முயற்சிகளுள் ஒன்று என்று நம்புகிறேன்." இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

விழாவில் கன்னட சாகித்ய பரிஷத் தலைவர் மானுபலிகர், பேராசிரியர் சிவகுமார் சால்யா, அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.வி.எஸ்.சுந்தரம், கன்னடக் கவிஞர் தோதரங்க கெளடா, கன்னட மொழித் துறைத் தலைவி தமிழ்ச்செல்வி ஆகியோரும் பல்கலைக் கழக மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Poet Vairamuthu speech


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles