சென்னை:கடந்த மாதம் எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதியதில், கச்சா எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதனால், எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்புற கடல் பரப்பில் பெரும் சுற்றுப்புற சீர்கேடு நிகழ்ந்தது. இதனால் மீன்வளம் குறைந்ததோடு மட்டும் அல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த கச்சா எண்ணெய்க் கசிவு கடற்படையினர், தன்னார்வலர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோரின் பெரும் முயற்சிக்குப் பிறகு கடலிருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
எண்ணூர் துறைமுகத்தில் நிகழ்ந்த கச்சா எண்ணெய் கசிவு விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் நிவாரணம் வழங்கப்படும், அதன் படி, எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், எர்ணாவூர், நொச்சிக்குப்பம் ஆகிய பகுதிகளில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன மீன்சந்தை நிறுவப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறியுள்ளார்.