புதுடெல்லி:ஊழலை, கருப்பு பணத்தை ஒழிக்க பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது, அதற்கு மாற்றாக புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை அரசு வெளியிட்டது, அதை தொடர்ந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபொசிட் செய்யுமாறும் அரசு உத்தரவிட்டது.
அந்த வகையில், ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்திருந்தால் வருமான வரித்துறை தன்னுடைய விசாரணை பார்வையை அவர்கள் மீது மேற்கொள்ளும் என்று கூறியிருந்தது.
அதே நேரத்தில் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை டெபாசிட் செய்திருந்தால், அவர்களைப் பொறுத்தமட்டில் தொடர் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதுபற்றி மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
70 வயதுக்கு உட்பட்ட குடிமக்கள் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்திருந்தால், அவர்கள் வருமான வரித்துறை இணையதளத்துக்கு போய் டெபாசிட் குறித்த விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இந்த டெபாசிட்டுகள் முந்தைய வருமான வரி கணக்குடன் ஒத்துபோகிறபோது, இந்த விவகாரம் முடித்துக்கொள்ளப்படும். மேல் விசாரணை கிடையாது.
அதே நேரத்தில் டெபாசிட்தாரர் சரி பார்க்காவிட்டால் அல்லது வருமானத்துக்கும் டெபாசிட்டுக்கும் ஒத்துபோகாவிட்டால், அவர்களிடம் கூடுதல் விளக்கம் கேட்கப்படும்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு (வரி செலுத்துபவர்கள்) இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சம் ஆகும். அவர்களது டெபாசிட்டுகளுக்கான ஆதாரம், சிறுசேமிப்பு, கடந்த கால வருவாய் சேமிப்பாக இருக்க வேண்டும். வேறு ஏதாவது தொழில் செய்து வருமானம் வராமல் இருக்கவேண்டும்.
இந்த டெபாசிட் பிரச்சினையில் பொதுவாக யாருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல், சட்டரீதியில் அல்லாமல் விளக்கம் கேட்கப்படும். அதாவது, ஆன்லைன் தவிர்த்து 3-ம் நபர் விசாரணை கிடையாது.
என்று அவர் கூறினார்.