சென்னை:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நாளை (பிப்ரவரி 24) கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த காலங்களை போல ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கியும், கழகத்திற்கு வலுவூட்டும் செயல்களை செய்தும் ஜெயலலிதாவின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அறுசுவை உணவுகளை அன்னதானமாக வழங்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை காப்போம், கழக அரசை நிலைநிறுத்தி மக்கள் பணியாற்றுவோம் என்றும், ஜெயலலிதாவின் ஆன்மா என்றென்றும் நமக்கு துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.