சென்னை:தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார், பின்னர் ஜெயலலிதா வகித்து வந்த கட்சியின் பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கு சென்றது. தற்போது நடைபெற்ற ஆ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கட்சி கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாவை தேர்வு செய்து, அவர் முதலமைச்சராக பதவியேற்கும் நடைமுறைகளை செய்யத் தொடங்கி உள்ளனர்.
அதற்கு ஏதுவாக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் வித்யாசாகர் ராவ், மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தின் இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் நாளை பிரதமர் மோடியையும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கும் ஸ்டாலின், தமிழகத்தின் தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து விளக்க உள்ளார். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பின் பதவியேற்பு விழாவை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.