சென்னை எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்ட கப்பல் விபத்தை தொடர்ந்து கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கடலில் கச்சா எண்ணெய் கலந்ததால் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் நச்சு தன்மை உடையதாக இருக்கும் என்று தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் மீன் விற்பனை பெரும் அளவில் சரிந்துள்ளது.
இதனிடையே தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கடலில் கலந்துள்ள எண்ணெய் படிமத்தை அகற்றும் பணி விரைவில் முடிவடையும் என தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் மீன்களை ஆழ்கடலுக்கு சென்று பிடித்து வருகிறார்கள். ஆகவே அவைகளை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும், சமூக ஊடகங்களில் வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.