சென்னை: அதிமுக-வின் பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
சசிகலா முதல்வராக பதவி ஏற்றாலும், எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். தற்போது ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி மட்டுமே காலியாக இருக்கிறது. ஆனால், அங்கு போட்டியிட வேண்டாம், என்று மூத்த தலைவர்கள் சசிகலாவிடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சசிகலாவுக்காக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய பல எம்.எல்.ஏக்கள் முன்வந்துள்ளனர். இது தொடர்பாக தினமும் சசிகலாவை சந்திக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
100 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியில் போட்டியிடுவதே நல்லது என்பதால் சசிகலா ஆண்டிப்பட்டி தொகுதியிலேயே போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.