சென்னை: அதிமுக கட்சி சார்பாக, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா, அக்கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அதிமுக வில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுதாக்கலில், சசிகலா புஷ்பா சார்பாக அவருடைய கணவர் மற்றும் வழக்கறிஞர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முயற்சித்தனர், ஆனால், அவர்களை அதிமுகவினர் சரமாரியாக தாக்கி, அங்கிருந்து வெளியேற்றினர்.
இதுதொடர்பாக சசிகலா புஷ்பா கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா வருவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்றார்.
மேலும், "தேர்தல் அறிவிக்காமல், குறுக்கு வழியில், பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி, இதனைச் செய்துள்ளனர். ஒன்றரை கோடி தொண்டர்கள் சேர்ந்து, பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா, குறுக்கு வழியில் பொதுச்செயலராக விரும்புகிறார். அவருக்கு ஆதரவு உள்ளது என்றால், முறைப்படி தேர்தலை நடத்தலாம். அவரை, தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும், பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியாது," என்றும் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.