புதுடெல்லி: கருப்பு பணம் மற்றும் கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். மேலும், இருப்பு வைத்துள்ள இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
ஆனால், இன்று வங்கிகள் விடுமுறை. ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் இந்த நோட்டுக்களை வாங்காததால் அத்யாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை சந்தித்தனர்.
இதேபோல் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை செலுத்தும் வாகன ஓட்டிகள் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு தயங்கினர். சில்லரை தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதன் காரணமாக பல சுங்கச்சாவடிகளில் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை சமாளிப்பதற்காக சில இடங்களில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
சுங்கச்சாவடிகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதாக நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் ராகவ் சந்திரா பிரதமரின் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மேற்குறிப்பிட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்கும்படி அரசு கேட்டுக்கொண்டது.
“நாடு முழுவதிலும் உள்ள 365 சுங்கச்சாவடிகளிலும் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறோம். சுங்கச்சாவடிகளில் ஏற்படும் பிரச்சனை மற்றும் நீண்ட வரிசையில் வாகனங்கள் தேங்கி நிற்பதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
இருப்பினும் சில்லரை தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக இருப்பதால் வாகனங்களை உடனுக்குடன் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
இந்நிலையில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார். வாகன போக்குவரத்து தடையின்றி நடக்க ஏதுவாக தற்காலிகமாக கட்டணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.