சென்னை:கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.
மக்களிடம் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு டிசம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அவை நேற்றிரவு முதல் வெறும் காகிதங்களாக கருதப்படுகின்றன.
இந்த அதிரடி நடவடிக்கை ஒரு புறம் வரவேற்பை பெற்றாலும் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் இன்று ஒருநாள் பண பரிவர்த்தனையில் ஈடுபடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகள் பொது மக்கள் சேவையில் ஈடுபடாமல் மூடப்பட்டு இருந்தது.
ஆனால் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் பணிக்கு வந்திருந்தார்கள். அவர்கள் வழக்கமான பண பரிமாற்றம், காசோலை பரிமாற்ற பணிகளை செய்யாமல் தற்போதுள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண்டல்களாக கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
வங்கிகளும், ஏ.டி.எம். மையங்களும் இன்று முழுமையாக செயல்படாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
பொதுமக்களுக்கு இன்று ஏற்பட்டு இருக்கும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் வங்கிகள் உடனடியாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடவும் அதற்கு தேவையான நட வடிக்கைகளை எடுக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகளை நாளை (10-ந்தேதி) முதல் அனைத்து வங்கிகளில் வழங்க ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதால் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் இருப்பு வைக்கவும், ஏ.டி.எம். மையங்களில் நிரப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியில் இருந்து ஒவ்வொரு வங்கிகளும் புதிய ரூபாய் நோட்டுகளை இன்று இரவுக்குள் பெற்று வங்கியில் இருப்பு வைக்கும் பணியில் ஈடுபடுகிறது.
மேலும் அனைத்து ஏ.டி.எம்.களிலும் பணத்தை நாளைக்குள் நிரப்பவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இன்று வங்கி அதிகாரிகள் குவிந்தனர். ஒவ்வொரு வங்கிக்கும் குறிப்பிட்ட அளவு புதிய ரூபாய் நோட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சென்னையில் இருந்து அனைத்து நகரங்களுக்கும் புதிய ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன. ஏ.டி.எம்.களில் நாளை இரவுக்குள் பணம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் (11-ந்தேதி) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏ.டி.எம். மையங்கள் நாளை முழு அளவில் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (11-ந்தேதி) முதல் அனைத்து ஏ.டி.எம். மையங்களில் இருந்தும் புதிய ரூபாய் நோட்டுகளை எடுக்க முடியும்.
இது தவிர 100 ரூபாய் நோட்டுகளும் அதிகளவு கையிருப்பு வைத்திருக்கவும், ஏ.டி.எம். மையங்களில் நிரப்பவும் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது ரூ. 100க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றை அதிகளவு வினியோகிக்க அனைத்து வங்கிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.