சென்னை:ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட காரணத்தால் இந்திய பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் சர்வதேச அளவில் சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிலாரி வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறி வந்த நிலையில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் சர்வதேச பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் நோட்டுகள் பிரச்சனை எழுந்துள்ள நிலையில் அமெரிக்க தேர்தலும் சேர்ந்து இந்தியர்களுக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது. பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ரூ. 7 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
பங்கு சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் தங்கம் விலையை அதிகரிக்க செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே இன்று தங்கம் விலை அதிகமாக உயர்ந்தது.
இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2878-ல் இருந்து ரூ.182 அதிகரித்து ரூ.3060 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக பவுன் விலையில் ரூ.1456 அதிகரித்தது.
இன்று சென்னை நகைக் கடைகளில் ஒரு பவுன் தங்கம் ரூ.24,480க்கு விற்பனை ஆனது. இந்த மாதத் தொடக்கத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.22,928 ஆக இருந்தது. கடந்த ஒரு வாரத்துக்குள் தங்கம் விலை ரூ. 2 ஆயிரம் வரை உயர்ந்து விட்டது.
வெள்ளி விலையும் இன்று அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.44,050 ஆக இருந்தது. இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.44,960 ஆக உயர்ந்தது.