சென்னை:கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரணம் அடைந்தார்.
ஆகையால் இந்த மூன்று தொகுதிகளுக்கும் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வேட்பு மனுவை திரும்பப் பெறுதல் நடைமுறை முடிந்த பின்னர் இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் பரிசீலனைக்குப் பிறகு 30 பேர் மனு ஏற்கப்பட்டது. இதில் இரண்டு பேர் மனுவை வாபஸ் பெற்றதால் 28 பேர் போட்டியிடுகின்றனர். தஞ்சாவூரில் 15 பேர் மனு ஏற்கப்பட்டது. இதில் ஒருவர் மனுவை திரும்பப் பெற்றதால் 14 பேர் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் 46 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 7 பேர் வாபஸ் பெற்றனர். இதனால் 39 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆகவே, இந்த மூன்று தொகுதிகளிலும் 81 பேர் போட்டியிடுகிறார்கள். 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 22-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.