புதுடெல்லி:இந்தியா - இலங்கை இடையே மீனவர்கள் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. சர்வதேச கடல் பகுதி அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று கைது நடவடிக்கை மேற்கொள்கிறது. மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.
இதையடுத்து இந்தியா - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண இருநாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்தன. டெல்லியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முதலில் மீனவ பிரதிநிதிகள் குழுக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தமிழக மீனவர்கள் தரப்பில் பேசும்போது, இலங்கை பறிமுதல் செய்துள்ள 114 படகுகளையும், 9 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும், 83 நாட்கள் கடலில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறினார்கள்.
இலங்கை தரப்பில் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
இறுதி கட்டமாக இந்தியா - இலங்கை மந்திரிகள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண் மற்றும் மீன் வளத்துறை மந்திரி ராதா மோகன்சிங், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், இலங்கை சார்பில் வெளியுறவுத் துறை மந்திரி மங்கள சமவீரா, மீன்வளத்துறை மந்திரி மகிந்த அமர வீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையில் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் இலங்கை மந்திரிகள் பேட்டியளித்தனர். அப்போது ‘‘எல்லைத் தாண்டும் மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது. அதேபோல், மீனவர்கள் எல்லைத்தாண்டும்போது உயிர்ச்சேதம் ஏற்படாது’’ என்று உறுதி அளித்தனர்.
மேலும், மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசுவதற்காக கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுக்குழு கூட்டத்தில் படகுகளை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும். இந்த குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும்’’ என்றனர்.
Image may be NSFW.
Clik here to view.