'நடிகர் பவத்கான், நடிகை மகிராகான்.'
மும்பை:பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட நடிகர் - நடிகைகள் மும்பையில் தங்கி இந்திப் படங்களிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வருகிறார்கள்.
காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் பலியானார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மும்பையில் தங்கி இருக்கும் பாகிஸ்தான் நடிகர்- நடிகைகள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மராட்டிய நவநிர்மான் சேனா துணை தலைவர் ஷர்மிளா ராஜ்தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜ்தாக்கரே கட்சியின் திரைப்பட பிரிவு தலைவரான அமேயா கோப்கர் கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே மும்பையைச் சேர்ந்த பிரபல சினிமா கம்பெனிகளுக்கு ஒரு அறிக்கையை அனுப்பினோம்.
அதில் நம் நாட்டில் திறமையான புகழ்பெற்ற நடிகர் - நடிகைகள் இருக்கும் போது பாகிஸ்தானில் இருந்து ஏன் இறக்குமதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறோம்” என்றார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர் பவத்கான், இயக்குனர் கரன் ஜோகரின் ‘ஏ தில்’ மெய்ன் முஷ்கில் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார், பாகிஸ்தான் நடிகை மகிராகான், ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘ரயீஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 2017 ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது.
இவர்கள் தவிர நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் மும்பை வந்து சினிமா படங்களிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்று ஷர்மிளா ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
இதற்கிடையே மும்பையில் உரிய ஆவணங்களுடன் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நடிகர் - நடிகைகள் உள்பட அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். எனவே அவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.