சேலம்:சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8-ந் தேதி கொண்டு வரப்பட்ட ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணத்தில் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
அன்று இரவு 9 மணி அளவில் சேலத்தில் இருந்து புறப்பட்ட அந்த ரெயில் மறுநாள் சென்னை வந்த பின்னர்தான் கொள்ளை சம்பவம் பற்றி தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா, ஐ.ஜி.மகேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ரெயில் கொள்ளை தொடர்பாக வங்கி ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரெயில் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி சேலம் விரைந்தார்.நேற்று அவர் அங்கு அதிரடி விசாரணை நடத்தினார். சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாரை சந்தித்து பேசிய அவர் அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது ரெயில் கொள்ளை தொடர்பாக சேலத்தில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் பற்றிய விவரங்களையும் அவரிடம் கேட்டறிந்தார்.
சேலத்தில் இருந்து ரெயிலில் பணப்பெட்டியுடன் பாதுகாப்புக்காக போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த், ஏட்டுகள் கோவிந்தன், சுப்பிரமணி, போலீஸ்காரர்கள் கணேசன், செந்தில் குமார், பெருமாள், ரமேஷ் ஆகிய 9 பேர் வந்திருந்தனர்.
அவர்களில் உதவி கமிஷனர் நாகராஜன் ஏ.சி. பெட்டியில் பயணம் மேற்கொண்டார். மற்ற 8 பேரும் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து 3 பெட்டிகள் தள்ளி இருந்த எஸ்.1 பெட்டியில் பயணம் செய்தனர்.
இதை தொடர்ந்து உதவி கமிஷனர் நாகராஜன் இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் 6 போலீசாரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது பாதுகாப்பு பணியில் நீங்கள் 9 பேரும் ஈடுபட்டது எப்படி என்பது பற்றி கேட்டறிந்தார்.
இவர்கள் அனைவரும் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது, எனவே உதவி கமிஷனர் நாகராஜன் உள்ளிட்ட 9 போலீசார் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அனைவரும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரெயில் டிரைவர் மற்றும் உதவியாளரிடமும் விசாரணை நடத்தினர்.
சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளை நடந்த அன்று கோபாலகிருஷ்ணன் என்ற டிரைவர் ரெயிலை ஓட்டி வந்துள்ளார். அவருக்கு உதவியாக ரகுபதி என்பவர் பணியில் இருந்துள்ளார். இருவரிடமும் இன்று எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. எனவே ரெயில் கொள்ளையில் விரைவில் துப்பு துலங்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.