செங்குன்றம்:சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கடந்த ஜூன் 24-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கோட்டையை சேர்ந்த ராம்குமாரை கடந்த ஜூலை 2-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் உள்ள உருவம் கைதான ராம் குமாரின் உருவத்தோடு ஒத்துபோகிறதா என்பதை அறிய ராம்குமாரை வீடியோ படம் எடுக்க எழும்பூர் நீதிபதி பிரகாஷ் அனுமதி வழங்கினார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வரும் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தேவராஜ், 2 போட்டோகிராபர்கள், 1 போலீசார் உள்பட 4 பேர் இன்று காலை 7 மணிக்கு ஜீப்பில் புழல் சிறைக்கு சென்றனர். பின்னர் சிறை அறையில் இருந்து ராம்குமார் வெளியே வந்தார். சுமார் ½ கிலோ மீட்டர் அவரை நடக்க வைத்து வீடியோ எடுத்து அதை பதிவு செய்தனர்.
இப்பொழுது பதிவான வீடியோவையும், நுங்கம்பாக்கம் ரெயில்வே நிலையத்தில் கொலை நடந்த போது பதிவான வீடியோவையும் ஒப்பிட்டு பார்த்து போலீசார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.