லக்னோ:உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியை பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதேசமயம், தயாசங்கர் சிங் மீது லக்னோ காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதனால், தயாசங்கர் சிங் தலைமறைவானார். கைது செய்ய தடை விதிக்கக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தயாசங்கர் சிங் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தின் புக்சர் நகரில் தயாசங்கர் சிங் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பீகார் சென்ற உ.பி.போலீசார், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புக்சரில் பதுங்கியிருந்த தயாசங்கர் சிங்கை கைது செய்தனர்.