ஸ்ரீநகர்:பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக திகழ்ந்தவன் பர்கான் முசாபர் வானி (வயது 22). காஷ்மீர் மாநிலத்தின் கமாண்டர் போல செயல்பட்டு வந்த இவனையும் இவனது கூட்டாளிகள் இருவரையும் பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக்கொன்றனர்.
தீவிரவாதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் பரவியதும் அனந்த்நாக் மாவட்டத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதி கொல்லப்பட்டதற்கு எதிரப்பு தெரிவித்து இன்று கடை அடைப்பு நடத்த பிரிவினைவாத தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் அம்மாவட்டத்தில் பதற்றத்தை தணிக்க ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி ஆக்ரோஷமாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பொதுமக்கள் யாரும் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டது. குல்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் நடந்த வன்முறை மோதல்களில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தெற்கு காஷ்மீரில் 5 காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் தீக்கிரையாக்கப்பட்டன.