லண்டன்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடை பெற்று வருகிறது.
நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து)- 10-ம் நிலை வீரர் தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) மோதினார்கள்.
இதில் முர்ரே 6-3, 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் 3-வது முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக கிராண்ட் சிலாம் போட்டிகளில் 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு அரை இறுதியில் 17 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)- ஆறாம் நிலை வீரரான மிலோஸ் ரோனிக் (கனடா) மோதினார்கள். இதில் 3-ம் நிலை வீரரான பெடரர் 3-6, 7-6 (7-3), 6-4, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு தோற்றார்.
ரோனிக் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆன்டிமுர்ரே- ரோனிக் மோதுகிறார்கள்.
இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- நான்காம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) மோதுகிறார்கள்.