புதுடெல்லி: இந்தியாவின் அரசியல் போக்கை நிர்ணயம் செய்வதில் உத்தரபிரதேச மாநிலம் முக்கியமான, முதன்மை மாநிலமாக உள்ளது. அம்மாநிலத்தில் அதிக வெற்றியை பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் 90 சதவீதத்தை பா.ஜ.க. கைப்பற்றியது. இந்த அபரிமிதமான வெற்றிக்காக அமித்ஷா சுமார் 2 ஆண்டுகள் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டிருந்தார். அவர் தேடி கொடுத்த வெற்றியால்தான் மத்தியில் பிரதமர் நாற்காலியில் மோடி அமர முடிந்தது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு மாநில ஆட்சியைக் கைப்பற்றினால் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது மிக எளிதாக இருக்கும் என்று பா.ஜ.க. கருதி, அங்கு வேலையைத் தொடங்கி விட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் உஷாராகியுள்ளது. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற வேண்டும் என்று தீர்மானித்துள்ள காங்கிரஸ் கட்சி, வெற்றிக்கு உதவும் நிபுணரான பிரசாந்த் கிஷோர் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பிரசாந்த் கிஷோர்தான் 2014-ம் ஆண்டு பா.ஜ.க.வின் பிரசாரத்துக்கு வியூகம் வகுத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் எப்படி பிரசாரம் செய்தால் வெற்றி பெற முடியும் என்று வியூகம் வகுத்து கொடுத்து வருகிறார். அவர் உத்தரபிரதேச தேர்தலில் தற்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர்களை வைத்துக் கொண்டு வெற்றி பெற இயலாது என்பதை திட்டவட்டமாக கூறி விட்டார்.
பிரியங்கா காந்தியை முன் நிறுத்தி தேர்தலை சந்தித்தால் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுத்து கொடுத்துள்ளார். முதலில் அவர் பிரியங்காவை உத்தர பிரதேச முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தினார். ஆனால் முதல்வர் பதவிக்கு போட்டியிட பிரியங்கா ஆர்வம் காட்டவில்லை. சோனியாவும் அதை விரும்பவில்லை.
இதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு பிரியங்காவை நேரில் அழைத்து சென்று பிரசாரம் செய்தால் வெற்றி கிடைக்கும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். எனவே பிரியங்கா 150 பொதுக்கூட்டங்களில் பேசவும் நிறைய யாத்திரைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பிரியங்கா பொதுக்கூட்டங்கள் நடத்துவதன் மூலமாகவும் வாக்காளர்களை கவரவும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சோனியா மற்றும் ராகுலுடன் நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளரான குலாம்நபி ஆசாத் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாளராக பிரியங்காவை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதோடு உத்தரபிரதேசம் முழுக்க நட்சத்திர பேச்சாளராக பிரியங்காவை மாற்ற தீர்மானிக்கப்பட்டது.
உத்தரபிரதேச காங்கிரசுக்கு பிரியங்காவை பொறுப்பு ஏற்க வைப்பதன் மூலம் தலித் மற்றும் உயர் சாதியினர் வாக்குகளை மீண்டும் பெற முடியும் என்று சோனியா நம்புகிறார். எனவே பிரியங்காவை களம் இறக்குவதற்கான அறிவிப்பு மிக விரைவில் வர உள்ளது.
சமீபகாலமாக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீது நிறைய ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. அதை எதிர்கொள்ள வேண்டுமானால் அரசியலில் குதித்தால்தான் முடியும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரசுக்கு தலைமை ஏற்க பிரியங்கா சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரியங்காவை தீவிர அரசியலுக்கு வருமாறு கடந்த சில ஆண்டுகளாக காங்கிரசார் அழைப்பு விடுத்து வந்தனர். அதை பிரியங்கா கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். தற்போது கணவருக்கு சிக்கல் வந்துள்ளதால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வகையில் உத்தரபிரதேச தேர்தலில் பிரியங்கா ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
உத்தரபிரதேசம் பிரியங்காவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்திக்கு பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுலுக்கு இது சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.
உத்தரபிரதேச தேர்தலில் பிரியங்கா அதிக வெற்றியை காங்கிரசுக்கு தேடி கொடுத்தால், அதன் பிறகு ராகுலுக்கான முக்கியத்துவம் குறைந்து விடும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.