புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஜோன் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த யு மும்பா அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் ஹைதராபாத்தில் சந்தித்தன. யு மும்பா அணி தனது முதல் போட்டியில் புனே அணியிடம் தோற்று இருந்தது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு இதுவே முதல் போட்டியாகும்.
ஹரியானா அணி சவால் தந்தாலும் ஆட்டத்தின் தொடக்கம் முதலே மும்பை அணியின் கை ஓங்கி இருந்தது. ஹரியானாவின் விகாஷ் கான்டோலா, மும்பாவின் ஷபீர் பாப்பு பம்பரம் போல் சுற்றிச்சுழன்று அச்சுறுத்தினர். ஆனால் ஹரியானா வீரர்கள் முதல் பாதியின் கடைசி கட்டத்தில் மளமளவென புள்ளிகளை குவித்து தங்கள் அணியை முன்னிலை பெற வைத்தனர். 2வது பாதியில் ஆட்டம் மேலும் சில டிகிரிகள் சூடேறியது. ஹரியானா அணி வீரர்கள் மேலும் வேகம் காட்டி 7 புள்ளி வித்தியாசத்தில் வலிமையான முன்னிலை பெற்றனர்.
ஆனால் விட்டேனா பார் என மும்பா வீரர்கள் தொடை தட்டி ஆடி இடைவெளியை படுவேகத்தில் குறைத்தனர். குறிப்பாக காஷிலிங் அடாகே கலக்கினார். இந்த சூழலில் எதிராளிகளை ஆல்அவுட் செய்து மும்பா மீண்டும் ஆட்டத்தை தன் பிடியில் கொண்டு வந்தது. ஆட்ட முடிவில் 29 - 28 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா த்ரில் வெற்றியை பெற்றது. மும்பா தரப்பில் காஷிலிங் அதிக புள்ளிகளையும் ஹரியானா தரப்பில் விகாஷ் அதிக புள்ளிகளையும் எடுத்தனர்.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/U-Mumba-31-07-17]