கேப்டன் ரோஹித் குமாரின் அபார ஆட்டத்தால் பெங்களூரு புல்ஸ் வெற்றியுடன் புரோ கபடி தொடரை தொடங்கியது. டைட்டன்ஸ் தொடர்ந்து 2வது தோல்வியை சந்தித்தது.
புரோ கபடி லீகின் இன்றைய போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி பெங்களூர் புல்ஸ் அணியை எதிர்கொண்டது. உள்ளூர் அணியான டைட்டன்ஸ், ராகுல் சவுத்ரி தலைமையில் களமிறங்கிய போது ரசிகர்கள் ஆரவாரம் 90 டெஸிபல் அளவில் விண்ணை தொட்டது. டைட்டன்ஸ் முதல் இரு ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி ஒரு தோல்வி அடைந்திருந்தது. பெங்களூருவுக்கு இத்தொடரில் இதுவே முதல் போட்டி ஆகும்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெங்களூரு வீர்ர்களின் கிடுக்கிப்பிடியில் டைட்டன்ஸ் சிக்கித்திணறியது. குறிப்பாக பெங்களூரு கேப்டன் ரோஹித் குமாரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் எதிரணியை ஆல்அவுட் செய்து பெங்களூரு போனஸ் பாயின்ட் பெற்றது. முதல் பாதி முடிவில் பெங்களூரு 15 - 10 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2வது பாதி ஆட்டத்திலும் டாப் கியரில் ஆடிய பெங்களூரு வீரர்கள் ஆட்டத்தில் தங்கள் பிடியை இறுக்கிக்கொண்டே வந்தனர். டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் சவுத்ரி கணிசமான நேரம் வெளியில் இருக்க நேர்ந்தது டைட்டன்ஸுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. ஆட்ட முடிவில் பெங்களூரு அணி 31- 21 என்ற புள்ளிக்கணக்கில் டைட்டன்ஸ் அணியை துவம்சம் செய்து வெற்றிபெற்றது.
இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி கேப்டன் ரோஹித் 10 பேரை அவுட்டாக்கி சூப்பர் டென் சாதனையை செய்தார். டைட்டன் அணிக்கு ஒரு ஆறுதலாக அதன் கேப்டன் ராகுல் சவுத்ரி புரோ கபடி லீக்கில் தனது 500வது ரைடு பாயின்ட் எடுத்து புதிய சாதனை படைத்தார்.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/MAtch-6-31-07-17]