சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி தினகரனுக்கு கடந்த 2 ஆம் தேதி டெல்லி நிதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க அவர் காரில் புறப்பட்டு சென்றார், அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான சூழ்நிலை இருப்பதாக தெரியவில்லை. அ.தி.மு.க அமைச்சர்கள் ஏதோ பயம் காரணமாக இருக்கிறார்கள், அதனால் தான் என்னை விலகி இருக்க சொன்னார்கள். அவர்கள் என்னை சந்திக்காமல் இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். எனக்கு தொண்டர்களின் ஆதரவு உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தலையிடவும், தொந்தரவு செய்யவும் எனக்கு விரும்பவில்லை. என்னுடைய பணி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது தான். இன்று சசிகலாவை சந்திக்க செல்கிறேன். அவரது ஆலோசனையை பெற்று கட்சி பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.