சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், மற்றும் அவருடைய உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் அமைச்சர் மீது நடைபெற்றுள்ள இந்த வருமான வரிச்சோதனையை வரவேற்கிறேன். ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்தித்து வருகிறது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனைகள் எல்லாம் சாட்சியமாக அமைந்துள்ளன.
வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் பொறுப்பு ஆளுநர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.