ராமேஸ்வரம்:இந்திய எல்லை பகுதியான ஆதம்பாலம் பகுதியில் தனுஷ்கோடி மற்றும் கச்சத்தீவு பகுதிகளுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பிரிட்சோ (22) என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படு காயமடைந்தனர்.
அதனையடுத்து, உயிரிழந்த மீனவரின் உடல், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பிரேதப் பரிசோதனை முடிவுற்ற நிலையில், மீனவரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர் வந்து சந்தித்து இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.