சென்னை:பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் நேற்று (16.02.17) மாலை எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அத்துடன் தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ், சட்டசபையில் 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஆளுநர் கேட்டுக்கொண்டபடி எடப்பாடி பழனிச்சாமி நாளை (சனிக்கிழமை) சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க இருக்கிறார். இதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.
நாளை பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
புதிதாக தி.மு.கவில் இடம் பெற்றுள்ள எம்.எல்.ஏக்களுக்கு வாக்கெடுப்பு பற்றி தெரியாது என்பதால், அது குறித்து விளக்கம் அளிக்கவும், வாக்கெடுப்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கவும் தி.மு.க கூட்டம் கூடுவதாக கூறப்படுகிறது.