திருச்சி:சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்து சமய ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.
அரசு நிதி மற்றும் பக்தர்கள் நன்கொடை சேர்த்து ரூ.30 கோடி செலவில் கடந்த 2011 ஆம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கின. பிப்ரவரி 6-ந்தேதி (இன்று) சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6-ம் கால யாகசாலை பூஜை கள் தொடங்கி த்ரவ்யா ஹூதி, 5.30 மணிக்கு பரிவார பூர்ணாஹூதி, 5.45 மணிக்கு பிரதானம் பூர்ணா ஹூதி, தீபாராதனை நடந்தது.
காலை 7.10 மணிக்கு மாரியம்மன் கோவில் தங்க விமானம், நூதன ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார விமானங்கள், மூலவர், மேற்கு, வடக்கு, தெற்கு வாசல் கோபுரங்கள், விநாயகர், உற்சவர் அம்பாள் சன்னதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, சென்னை ஐ கோர்ட்டு நீதிபதி ராமகிருஷ்ணன், முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.