லண்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களை செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்களை விதித்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின்படி, சிரியா நாட்டினருக்கு விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது. மேலும் சிரியா அகதிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இவை அமெரிக்காவில் தீவிரவாதிகள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் தங்குவதற்கு 4 மாதங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அகதிகள் குறித்த விவரங்கள் முழுவதையும் விவரமாக தெரிந்து கொண்டு அதன்பின்பு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அகதிகள் அமெரிக்காவில் தங்குவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஒபாமா அரசு இந்த (2017) ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க இலக்கு நிர்ணயித்து இருந்தது. தற்போது டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவில் முஸ்லிம் நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனி, அவர்கள் அகதிகளாக குடியேற விண்ணப்பிக்கலாம்.
மேலும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 90 நாட்கள் ‘சஸ்பெண்டு’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாடுகளில் இருந்து குடியேற விரும்புகிறவர்கள் குறித்த தகவல்களை அமெரிக்காவின் உள்நாடு மற்றும் வெளிநாடு துறை அதிகாரிகள், தேசிய உளவுத்துறையினருடன் இணைந்து தீவிரமாக விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ள இந்த காலக்கெடு உதவிகரமாக இருக்கும் என அமெரிக்க அரசு நம்புகிறது.
இந்நிலையில், அகதிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவு தமக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக, பாகிஸ்தானின் சமூக ஆர்வலரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போர் மற்றும் வன்முறையால் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வரும் குழந்தைகள், தாய்மார்கள் ஆகியோருக்கான கதவை அதிபர் டிரம்ப் அடைக்கிறார் என்பதை அறிந்து மனமுடைந்து போனேன்.
புது வாழ்க்கை கிடைக்கும் என்பதற்காக கடுமையாக உழைத்து உங்கள் நாட்டை கட்டமைக்க உதவிய மக்களை வரவேற்ற நாடு என்ற பெருமைக்குரிய பெயரை அமெரிக்கா இழப்பதை எண்ணியும் நான் மனமுடைந்துள்ளேன்.
தாங்கள் செய்யாத தவறுக்காக கடந்த ஆறாண்டு காலமாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டு குழந்தைகள் இந்த உத்தரவால் வஞ்சிக்கப்படுவதை எண்ணியும் நான் வேதனை அடைகிறேன். என்று அவர் தெரிவித்துள்ளார்.