சென்னை:ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை அவசரப்பட்டு போராட்டத்தில் தொலைத்து விட வேண்டாம் என ஜல்லிக்கட்டு ஆர்வலரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு அதரவாக சென்னை மெரினாவிலும், தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் ஒரு வார காலமாக போராடிவருகின்றனர். மெரினாவில் உடல் நல குறைவையும் பொருட்படுத்தாது பங்கேற்றதோடு, சொந்த செலவில் உணவு, குடிநீர் சப்ளை செய்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்நிலையில், மெரினாவில் இன்று போலீசார் தடியடி நடத்தியுள்ள சூழலில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் லாரன்ஸ் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டும் என்ற நமது போராட்டத்தின் பயனாக இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைத்துள்ளதாக தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய கவர்னர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதை அறிந்து நான் மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளேன். கடந்த ஒருவார காலமாக மெரினா கடற்கரையில் தொடர்ந்து நாம் நடத்திய போராட்டத்தின் மூலம் நமக்கு நிஜமான வெற்றி கிடைத்து விட்டது. இது, யாருக்குமே புரியவில்லை. எனவே, மறுபடியும் நாம் போராட்டகளத்தில் இறங்க வேண்டாம், நான் தற்போது மெரினா கடற்கரையை நோக்கி தான் வந்து கொண்டிருக்கிறேன்.
இந்த நாள் நாம் அடைந்துள்ள வெற்றியை சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டாட வேண்டிய நாள். மெரினா கடற்கரையில் உள்ள போராட்டக்காரர்கள் கடலுக்குள் இறங்கியும், சாலையில் அமர்ந்தும் போராட வேண்டாம்.
எங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு, மதிப்பளித்து ஆளுநர் மூலம் இந்த அவசர சட்டத்தை பிறப்பித்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.