சென்னை:ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதா என்று கொந்தளித்த பொதுமக்கள் இன்று சென்னையின் பல பகுதிகளில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று மெரினா கடற்கரையில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசாரின் நடவடிக்கையினால் சென்னையில் உள்ள பொதுமக்கள் வெகுண்டெழுந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மீது எப்படி தடியடி நடத்தலாம் என்று கேள்வி கேட்டு பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோடம்பாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போல் சென்னை அண்ணா சாலை, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட நகரின் பல முக்கிய சாலைகளில் இன்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பதற்றமும் நிலவி வருகிறது.
அவ்வழியா கடந்து சென்ற வாகனங்களை வழிமறித்த சிலர், "நாங்கள் தமிழர்களாக போராடுகிறோம், நீங்களும் தமிழனாக இருந்தால் இங்கே எங்களுடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராடுங்கள். இல்லாவிட்டால், ஓரமாக நின்று வேடிக்கை பாருங்கள் என்று அறிவுறுத்தினர்".