சென்னை:ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு இன்று காலையில் இருந்து காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால், அங்கிருந்து கலைந்து செல்ல தொடர்ந்த மறுத்துவரும் இளைஞர்கள், போராட்டத்தை கைவிட முடியாது எனவும், தங்களால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மெரினாவில் ஆங்காங்கே கூட்டமாக இளைஞர்களும், பெண்களும் கடலில் இறங்கியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எங்களை நெருங்கி வந்து கலைக்க முயற்சித்தால் நாங்கள் கடலுக்குள் சென்று விடுவோம் எனவும் அவர்கள் போலீசாரிடம் கூறி வருகின்றனர். இருப்பினும் பெண்களையும், குழந்தைகளையும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ குப்பங்களை சேர்ந்த ஒரு பிரிவினர் போராட்டகளத்தில் குதித்தனர். திருவல்லிகேணி மற்றும் பெசன்ட் நகர் பகுதியில் போலீசார் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
தங்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை கொண்டே போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். நிலைமை கைமீறி போனதால் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்துபோக மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பிரயோகித்து வருகின்றனர்.