சென்னை:ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மாணவர்களும், இளைஞர்களும் கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு அவசர சட்டம் ஏற்படுத்தியும் மாணவர்கள் அதனை ஏற்காமல் நிரந்தர சட்டமே வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிக்கப்படும். அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களை போலீசார் பலவந்தமாக இழுத்து அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
சென்னை மெரினாவில் மட்டுமல்லாமல் மதுரை அலங்காநல்லூர், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.