ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இம்மனு மீதான தீர்ப்பை அடுத்த ஒரு வார காலத்திற்குள் அளிக்க கூடாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தது.
மனுவில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முடிவெடுக்க உள்ளதால், தீர்ப்பை வரும் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டாம் என கோரப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வரும் ஒரு வாரத்திற்குள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி மாணவர்கள், இளைஞர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடைபெற வரைவு அவசர சட்டம் தயார் செய்து உள்துறை அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ள நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், உடனடியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.