சென்னை:தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து கொண்டாடும், உழைப்பின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் பண்டிகை. இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் பயிர் கருகியதால் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.
வருமானத்திற்கு போதிய வழியில்லாத காரணங்களால், நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே என்ற அடிப்படையில் தே.மு.தி.க. சார்பில் வரும் 13-ந் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) பிற்பகல் 3 மணியளவில், காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் காயார் கிராமத்தில் எனது தலைமையில் பொங்கல் விழா நடைபெறும். அதில் புத்தரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய் போன்ற பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்று அந்தந்த மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி, சிறப்பான முறையில் பொங்கல் விழாவினை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.