சென்னை: ஆங்கிலப் புத்தாண்டு தினம் (2017) வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனை வரவேற்று கொண்டாட நாடு முழுவதுமுள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு 1 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் "புத்தாண்டு கொண்டாட்டங்கள் டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணிக்குள் முடிய வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் மது பரிமாறக்கூடாது. குடிபோதையிலோ, வேகமாகவோ வாகனம் ஓட்டக்கூடாது. புத்தாண்டை கடற்கரையில் கொண்டாடுவோர் கடல்நீர் அருகில் செல்ல கூடாது.
புத்தாண்டு நாளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பட்டாசுகள் வெடித்தல் கூடாது. புத்தாண்டு வாழ்த்து கூறுவதன் பேரில் பெண்களை கேலி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு நாளில் நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது" என கூறப்பட்டுள்ளது.