சசிகலாவுக்கு மேலும் வலுக்கும் எதிர்ப்பு, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் ஓ.பி.எஸ்சுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்: எம்ஜிஆர் உறவினர் பேச்சால் அதிமுகவில் பரபரப்பு
சென்னை., டிச.24, எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலலிதாவுக்கு பெருந்தன்மையாக ஜானகி அம்மையார் விட்டுக் கொடுத்ததுபோல ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஜானகி எம்ஜிஆர் உறவினர் பேட்டியால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு முன்னாள் முதல்வர் ஜானகிஎம்ஜிஆரின் உறவினர்கள் இன்று அதிகாலை சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அப்போது ஜானகி எம்ஜிஆரின் உறவினர் சுதா விஜயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சேச்சாவை(எம்ஜிஆர்) நாங்க ரொம்ப மிஸ் பண்றோம். இன்னிக்கு அவரின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறோம். அவர் உருவாக்கிய அதிமுக என்னிக்கும் நன்றாக இருக்கும். அழியாது. இப்ப ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருக்கிறார். அவர் தொடர்ந்து நல்ல ஆட்சி தருவார்னு நம்புறோம்.
அதிமுக எப்போதும் நிலைத்து நிற்ககும். அதுக்கு இப்ப முதல்வராக இருக்கிற ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு நாம எல்லாரும் ஆதரவா இருக்கணும். அவரும் சிக்கல்கள் இல்லாம எல்லாரையும் வழி நடத்தனும். அதிமுகவில் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து இன்னும் நல்லா நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கட்சியினர் யார் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களே கட்சியை நடத்தலாம். யார் வந்தாலும் மக்களுக்கு தொண்டு செய்யணும். சேச்சா(எம்ஜிஆர்), ஜெயலலிதா அம்மா எப்படி கட்சியை சிறப்பா நடத்தி மக்களுக்கு நல்லது செய்தார்களோ அப்படி நடத்தனும் என்பதுதான் எங்களைப்போன்றவர்களின் ஆசை.
சேச்சா உருவாக்கிய கட்சி அழியக்கூடாது. ஓ.பன்னீர் செல்வம் இப்ப ஆட்சியில இருக்கார். ரொம்ப நல்லா போய்கிட்டிருக்கு. சேச்சா உருவாக்கிய கட்சி அவருக்கு பின்னாடி ஜெயலலிதா இருந்தார். அவர் இருக்கும்போதே ஓ.பன்னீர்செல்வத்தைதான் தேர்வு செய்தார். இப்ப அவர்தான் முதல்வராக இருக்கிறார். அவரோட நாம எல்லாரும் ஒண்ணா இருந்து கட்சியையும், ஆட்சியையும் நல்லா நடத்த ஒத்துழைப்பு தரணும். கட்சி உடையாம பாத்துக்கணும். இந்த நான்கரை வருஷ ஆட்சிக்கு பிறகும் அதிமுகதான் அடுத்த முறையும் ஆட்சியை பிடிக்கணும்னு நான் ஆசைப்படுகிறேன். அந்தளவுக்கு மக்களிடம் நல்ல ஆட்சியை இப்ப இருக்கிற முதல்வர் தருவார்னு நம்புறேன்.
பொது வாழ்க்கைக்கு யார் வேணாலும் வரலாம். கட்சியினர் யாரை ஏத்துக்கிறாங்களோ அவங்களை நாங்களும் ஏத்துக்கிறோம். முன்னாடி சேச்சா(எம்ஜிஆர்) இறந்தப்போ இப்படித்தான் ஒரு குழப்பம் வந்து இரட்டைபுறா, சேவல் சின்னம்னு ஜானகியம்மா, ஜெயலலிதா அம்மா பிரிஞ்சி நின்னாங்க. இரட்டை இலை முடங்கிப்போச்சி. அப்ப சோ சார்தான் தலையிட்டு எம்ஜிஆர் உருவாக்கின இரட்டை இலை இல்லாம போகக்கூடாதுன்னு பேசினார். ஜனங்களும் ஜெயலலிதாவை தலைவியா ஏத்துகிட்டதால ஜானகி அம்மா பெருந்தன்மையா கட்சியை விட்டுக் கொடுத்தாங்க.
அதுக்கு பிறகும் அவங்களும்(ஜெயலலிதா) நாங்களும் நல்ல நண்பர்களாதான் இருந்தோம். என் பையன் கல்யாணத்துக்கு ஜெயலலிதா அம்மா வந்து பரிசு கொடுத்து வாழ்த்திட்டு போனாங்க. அவங்களும் 29 வருஷம் கட்சியை சிறப்பா நடத்தி எம்ஜிஆர் உருவாக்கின கட்சியை ரொம்ப கட்டுக்கோப்பா நடத்தினாங்க. கடந்த வருஷம் வந்த வெள்ளத்துல எம்ஜிஆர் தோட்டம் கடுமையா பாதிக்கப்பட்டது. அப்ப கூட ஜெயலலிதா அம்மா தலையிட்டு எல்லாத்தையும் சீரமைச்சி குடுத்தாங்க.
தோட்டத்துல இருக்கிற எம்ஜிஆர் சிலையை வர்ற 17ம் தேதி திறக்கிறேன்னு சொல்லியிருந்தாங்க ஆனா இப்ப அவங்க இல்லைன்னு ரொம்ப வருத்தமா இருக்கிறது. இப்ப அவங்க இடத்துல முதல்வராக இருக்கிற ஓ.பன்னீர்செல்வமும் ரொம்ப சிறப்பா செயல்படுகிறார் வர்தா புயல்நேரத்துல இவரே களத்துல இறங்கினதை பாக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது. அவர் வந்து சிலையை திறந்து வைக்கணும்னு கேட்டுகிறேன். எப்படியிருந்தாலும் கட்சி உடையக்கூடாது. ஆட்சி சிறப்பா நடக்கணும். அடுத்த முறையும் எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலைதான் ஆட்சியை பிடிக்கணும் அதுக்கு எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்.இவ்வாறு சுதாவிஜயகுமார் கூறினார்.
பேட்டியின்போது சசிகலா பெயரையோ, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பெயரையோ மறந்தும்கூட பயன்படுத்தவில்லை. அப்படி கேள்விகள் எழுந்தபோதும் அதை மிக நாசுக்காக தவிர்த்து விட்டு எம்ஜிஆர் இறந்ததும் கட்சியில் ஏற்பட்ட குழப்ப சூழலில் கட்சியை காப்பற்ற ஜானகி எம்ஜிஆர் எப்படி பெருந்தன்மையாக கட்சியை ஆட்சியை ஜெயலலிதாவிடம் விட்டுக் கொடுத்தாரோ அப்படியே அவருக்கு பிறகு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு இன்றைக்கு முதல்வராக இருக்கிற ஓ.பன்னீர்செல்வத்துக்கு எல்லாரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றே சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். சசிகலா பெருந்தன்மையாக கட்சியை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்சியின் நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் துணைவியார் ஜானகி எம்ஜிஆரின் உறவினர்கள் எண்ணமாக இருக்கிறதோ என்கிறார்கள் கட்சியினர்.
எம்ஜிஆர் உறவினர்களின் இந்த அதிரடி பேட்டிகளால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரப்போதும் 29ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்றே தெரிகிறது. ஏற்கனவே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேரடியாகவே சசிகலாவை எதிர்த்து வருகிறார். இப்போது எம்ஜிஆரின் உறவினர்களும் பன்னீருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மத்திய அரசும் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவே இருக்கிறது. இதன் மூலம் முதல்வர் பன்னீருக்கு ஆதரவு கூடி வருவதையே இது காட்டுகிறது.