சசிகலாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு, அதிமுகவை வழி நடத்தும் திறமை முதல்வர் ஓ.பி.எஸ்சுக்குதான் இருக்கிறது: எம்ஜிஆர் உறவினர் அதிரடி பேட்டி
சென்னை: அதிமுகவை ஜெயலலிதாவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம்தான் வழி நடத்தவேண்டும் அவருக்குத்தான் அந்த திறமை இருக்கிறது என்று முன்னாள் முதல்வரும் எம்ஜிஆரின் துணைவியான ஜானகிஎம்ஜிஆரின் உறவினர் தீபன் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஜானகிஎம்ஜிஆர் உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜானகிஎம்ஜிஆர் உறவினர் தீபன்: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் என்றைக்கும் அழியாது. இன்றைக்கு அவருடைய நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறோம். வருகிற 17ம் தேதி புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழா வருகிறது. அந்த விழா சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், பாரதபிரதமர் மோடி ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறோம். அண்ணா நூற்றாண்டு விழா நேரத்தில் மத்திய அரசு ஒரு காயின் ரிலீஸ் செய்தார்கள். அதைப்போலவே புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்காக ஒரு காயின் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.
அந்த நல்ல செய்தி எப்போது வேண்டுமானாலும் வரும், நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஜெயலலிதா அம்மா இருந்தபோது விழாவை சிறப்பாக நடத்துகிறேன் என்று சொல்லியிருந்தார் அவர் இப்போது இல்லை. ஆனால், அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இப்போது முதல்வராகியிருக்கிறார். அவர் தலைமையில் இந்த விழாவை சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்புகிறோம்.
புரட்சித்தலைவருக்கு பிறகு எப்படி மக்கள் ஜெயலலிதா அம்மாவை ஏற்றுக் கொண்டார்களோ அதைப்போலவே அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இப்போது முதல்வராக இருப்பதுபோல கட்சியையும் வழி நடத்தவேண்டும். அவருக்கு மட்டும்தான் அந்த திறமை இருக்கிறது. அவரோடு நாம் எல்லாரும் துணை நிற்க வேண்டும்…..இவ்வாறு தீபன் பேசினார்.
பேட்டியின் இடையில் சசிகலா நடராஜன் பற்றி எழுந்த கேள்விகளுக்கோ, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை பற்றி எழுந்த கேள்விகளுக்கோ எந்த பதிலும் சொல்லவில்லை. குறிப்பாக பேட்டியில் எங்கும் சசிகலா என்றோ, தீபா என்றோ பெயர்களை கூட சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிமுக கட்சியில் சசிகலாவுக்கு எம்ஜிஆரின் உறவினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கறது தெளிவாகிறது.
ஏற்கனவே, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேரடியாகவே சசிகலாவை கடுமைய யாக எதிர்த்து வருகிறார். இப்போது கட்சியின் நிறுவனர் எம்ஜிஆரின் துணைவியார் ஜானகிஎம்ஜிஆரின் உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.