சென்னை:சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான பொன்னையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்கவும், பொதுச்செயலாளராக வருவதற்கும் முழுமையான தகுதி படைத்தவர் சசிகலா.
ஜெயலலிதாவின் நிழலாகவும், அவர் உச்ச நிலைக்கு வருவதற்கு அச்சாணியாக திகழ்ந்தவர். அவருடன் தோளோடு தோளாக நின்று செயல்பட்டார்.
ஜெயலலிதாவின் மனசாட்சியாக இருந்தவர் சசிகலா. தன் குடும்பத்தை துறந்து விட்டு ஜெயலலிதாவுக்காக தியாக வாழ்வு வாழ்ந்தவர்.
எனவே அவர்தான் ஜெயலலிதா இடத்தில் அமரத் தகுதியானவர். அவர் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும். அதை நாங்கள் ஏகமனதாக வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒருமனதாக சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பார்கள்.
கேள்வி:- நடிகர் ஆனந்த ராஜ் பரபரப்பாக கருத்து தெரிவித்து உள்ளாரே?
பதில்:- அந்த கேள்வியெல்லாம் வேண்டாம்.
கே:- சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வலை தளங்களில் வருகிறதே?
ப:- அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. அபாண்டமானது. அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.
ஜெயலலிதாவுக்காகவே தியாக வாழ்வு வாழ்ந்தவர் சசிகலா. அ.தி.மு.க.வை வழி நடத்த தகுதியானவர். அவரே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.