புதுடெல்லி: பஞ்சாப் சிறைச்சாலையில் இருந்து நேற்று தப்பிய காலிஸ்தான் பயங்கரவாதி ஹமீந்தர் சிங் மிண்டுவை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தின் நபா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அதிக பட்ச பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும் இந்த சிறையில் காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹர்மிந்தர் சிங் உள்பட தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை 10 மணி அளவில் போலீஸ் சீருடையில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழலை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த காலிஸ்தான் இயக்க பயங்கரவாதி ஹர்மிந்தர் சிங் மற்றும் சில கைதிகளை துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் தாங்கள் வந்த வாகனங்களில் அவர்களை ஏற்றி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சிறையை உடைத்து பயங்கரவாதிகள் தப்பித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பஞ்சாப் அரசை கேட்டு இருந்தார். தப்பிச்சென்ற ஹமீந்தர் சிங்கை பிடிப்பதற்காக அண்டை மாநிலங்களில் உள்ள போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். இந்த கும்பலை பிடிக்க உடனடியாக சிறப்பு அதிரடிப்படையை மாநில அரசு அமைத்தது.
தப்பிய கைதிகளையும், தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் பிடிப்பதற்காக ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் டெல்லி எல்லை அருகே இன்று ஹமீந்தர் சிங்கை டெல்லி போலீசாரால் கைது செய்தனர். அவருடன் தப்பிய மேலும் 5 பேர் இன்னும் பிடிபடவில்லை. அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.