சென்னை:தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22–ந் தேதி உடல்நிலைக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நேற்று 67–ம் நாளாக சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவுக்கு, சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரி சியாங் உடற்பயிற்சி அளித்து வருகிறார். ஒவ்வொரு உறுப்புகளுக்கும் வெவ்வேறு வகையில் பிசியோதெரபி உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி நிருபர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், "முதல்–அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்றும், அடுத்து அவர் எழுந்து நின்று நடக்க வேண்டும் என்றும், அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்புவார் என்றும்" தெரிவித்தார்.
அதன்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று எழுந்து நிற்க பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து அவருக்கு இதேபோல் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.