விஜயவாடா:பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி கிராம மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் கிராமங்களின் சமூக, கலாச்சார மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு பிரபலங்களும் ஒவ்வொரு கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.
அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜூ காந்திரிகா கிராமத்தை தத்தெடுத்தார்.
அக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறார். இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக இன்று அந்த கிராமத்திற்கு சச்சின் சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்டிருந்த சமூதாய கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் பேசினார்.
இதுதொடர்பாக சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “கிராம மக்களின் அன்பினால் முற்றிலும் திணறிவிட்டேன், கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழிப்பு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகழ்ச்சியளிக்கிறது,” என்று குறிப்பிட்டு உள்ளார்.
சச்சின் இக்கிராமத்தை தத்தெடுப்பதற்கு முன்னதாக அங்கு எந்த ஒரு வசதியும் கிடையாது, சாலை வசதி, மின்சார வசதி கிடையாது. குடிநீர் தட்டுப்பாடும் இருந்தது. ஆனால் சச்சின் தெண்டுல்கர் கிராமத்தை தடுத்து எடுத்த பின்னர் கிராமத்தில் சிறப்பான சாலை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.
இதற்காக சச்சின் தன்னுடைய எம்.பி. நிதியில் இருந்து ரூ.2.79 கோடி தொகையை பயன்படுத்தி உள்ளார். மத்திய அரசு கூடுதலாக ரூ. 3 கோடி ஒதுக்கி உள்ளது.