சென்னை:பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அவர் அறிவித்தது அன்று நள்ளிரவில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள தனியார் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாங்க மறுத்தனர்.
கடந்த 8-ந்தேதி மோடி அறிவித்த பிறகு, நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கொண்டு நகைகளை வாங்க தொடங்கினர். ஒரு சில இடங்களில் விடிய விடிய தங்க நகை வியாபாரம் நடைபெற்றது.
வியாபாரம் சூடுபிடித்ததால் தங்கத்தின் விலையும் மறுநாள் அதிகமானது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. தங்கம் விலை எப்படி குறைந்ததோ அதேபோல் அதன் விற்பனையும் தற்போது சரிந்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தங்க நகை கடைகளில் பெரும்பாலானவை, வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. தங்க நகை விற்பனை 80 சதவீதம் சரிந்து இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியது சரியான முடிவு தான். அவர் அறிவித்த சில மணி நேரங்களில் தங்க நகை கடைகளில் தங்கம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆனால் மறுநாள் முதல் நாங்கள் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை வாங்க மறுத்துவிட்டோம். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது வியாபாரம் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. மக்களிடையே பணப்புழக்கம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
கடந்த 9-ந்தேதி முதல் இன்று(நேற்று) வரை தங்க நகை விற்பனை 80 சதவீதம் சரிந்து இருக்கிறது. 20 சதவீத விற்பனை என்பது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கி செல்வது ஆகும்.
விற்பனை இல்லாததால் தங்க இறக்குமதியும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எங்களை போல் தங்க நகை பட்டறை தொழில் செய்பவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பணப்புழக்கம் மக்களிடையே இயல்பான நிலைக்கு வரும் வரை இதே நிலை தான் தொடரும்.
என்று அவர் கூறினார்.