சென்னை:சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அரவக்குறிச்சி, தஞ்சை திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு இரட்டைஇலை சின்னம் வழங்குவது தொடர்பான கட்சியின் அங்கீகார கடிதம் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டுள்ளது.
அது அவருடைய கைரேகை தானா என்பதில் சந்தேகம் உள்ளது. எனவே அங்கீகார கடிதத்தில் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைத்தது தவறு இதை ஏற்க கூடாது என்று தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினேன்.
தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எனவே கடிதத்தை ஏற்க கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். மாஜிஸ்திரேட்டை நியமித்து ஆஸ்பத்திரிக்கு சென்று ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்கி வர கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.