கவுகாத்தி:அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்ட பஞ்சாயத் துணைத்தலைவராக இருப்பவர் ரத்னேஸ்வர் மோரன். பா.ஜ.க.வைச் சேர்ந்த இவரது மகன் குல்தீப் மோரன் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தடை செய்யப்பட்ட உல்பா தீவிரவாத இயக்கத்தினரால் கடத்தப்பட்டார்.
அப்போது அவரை விடுவிக்க ஒரு கோடி ரூபாய் கேட்டதாக அவரது தந்தை ரத்னேஸ்வர் தெரிவித்தார்.
ஆனால், பணத்திற்காக கடத்தப்படவில்லை என்றும், தங்கள் நடமாட்டம் குறித்து ராணுவத்திற்கு தகவல் தெரிவித்ததற்காக கடத்தியதாகவும் உல்பா தலைவர் பரேஷ் பரூவா கூறினார்.
‘குல்தீப்பை எங்கள் கோர்ட்டில் நிறுத்துவோம். அப்போது அவர் அப்பாவி என்பது நிரூபணமானால் அவர் விடுவிக்கப்படுவார். நாங்கள் பணம் கேட்டதாக வெளியான அனைத்து தகவல்களும் பொய்’ என்றும் பரூவா கூறினார்.
கடத்தப்பட்ட குல்தீப்பை அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச போலீசார் தேடி வந்த நிலையில், அவரை உல்பா தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.