சண்டிகார்: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநிலத்தில் உள்ள வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக அங்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தங்கியுள்ள ஓய்வு இல்லம் அருகே பஞ்சாப் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் பல்பிர் ராணி சோதி தலைமையில், ஏராளமான பெண்கள் மற்றும் காங்கிரசார் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கெஜ்ரிவாலின் உருவ பொம்மையை எரித்து முழக்கமிட்டனர்.
இந்த போராட்டத்தை வழிநடத்திய பல்பிர் ராணி சோதி பேசியதாவது:
ஆம் ஆத்மி கட்சி தனித்துவமான கட்சி என்ற முழக்கத்துடன் டெல்லியில் ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில மக்களின் நலனுக்காக இதுவரை எதுவும் செய்யவில்லை. அக்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆளாகி வருகின்றனர். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்சியில் அமர்த்திய மக்கள் தற்போது வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில், நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை முன்வைத்து பஞ்சாப்பில் முழக்கமிட்டு வருகிறார். இதன்மூலம் பஞ்சாப் மக்களை அரவிந்த் கொஜ்ரிவால் தவறாக வழி நடத்துகிறார். ஆனால் பஞ்சாப் மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள். வருகின்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை மக்கள் விரட்டியடிப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.