பெங்களூர்:உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை கண்டித்தும் கர்நாடகாவில், இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக-கர்நாடகம் இடையிலான வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்திற்கு கர்நாடக அரசு 15 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து காவிரி படுகை மற்றும் தலைநகர் பெங்களூரில் அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. போராட்டம் தொடர்ந்தால் மாநில பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படுவதுடன், பெரும்பாலான பகுதிகளில் சாமானிய மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
எனவே, காவிரி நதிநீர் விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காணவேண்டும். பிரச்சனையை தீர்ப்பதற்கு முதலமைச்சர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவினால் கர்நாடகாவில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும். விவசாயத்துக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.