சென்னை:தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த மாதத் துவக்கத்தில் 2.8.2016 அன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், மற்றும் கழக உறுப்பினர்கள் ரெங்கநாதன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன” என்பது குறித்து கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது பேசிய கழக உறுப்பினர் சேகர்பாபு, “தமிழகத்தில் கடந்த ஆண்டு 4,515 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 12 பேர் உயிரிழந்துள்ளனர்; இந்த ஆண்டு, இதுவரை 982 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் இறந்துள்ளனர், அரசு எடுத்த நடவடிக்கை என்ன” என்று கேள்வி எழுப்பிய நேரத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தமிழகத்தில் டெங்கு நோய் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் இறக்கும் நிலை இங்கில்லை. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை முதல்வர் ஜெயலலிதாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது, டெங்கு காய்ச்சலால் இறப்பு இல்லை என்ற மாநிலமாக தமிழகத்தை முதல்வர் ஜெயலலிதா பாதுகாத்து வருகிறார்” என்று பதிலளித்தார்.
ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேரவையில் அளித்த பதில் உண்மைக்கு மாறானது என நிரூபித்திடும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் காவேரி ராஜபுரம் என்ற கிராமத்தில் மட்டும் கடந்த ஒரே மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில், பாபு என்பவரின் 6 வயது மகன் யுவராஜ் கடந்த 13ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து 19ஆம் தேதி மனோஜ் என்பவரின் 4 வயது மகன் சதீஷ் என்கிற சந்தோஷ் மருத்துவமனையில் இறந்திருக்கிறார். 20ஆம் தேதி தேவய்யா என்பவரின் 9 வயது மகன் மோகன், செங்கய்யா என்பவரின் 5 வயது மகன் மோகன்குமார் ஆகிய இரண்டு சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.
கடந்த மாதம் 16ஆம் தேதியன்று கழகத்தின் சார்பில் ஆறு பேர், டெங்கு காய்ச்சல் பற்றி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றினை பேரவையிலே கொண்டு வந்தனர்.
திருவள்ளூர் தொகுதியின் கழகச் சட்டமன்ற உறுப்பினர், வி.ஜி.ராசேந்திரன், 20ஆம் தேதி காலையில் மறைந்த நான்கு சிறுவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்ற சிறுவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாநில சுகாதாரத்துறை இயக்குனரைக் கேட்டுக் கொண்டார். திருத்தணி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 35 பேரையும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
24.8.2016 அன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காவேரிராஜபுரம் என்ற அந்தக் கிராமத்திற்கே நேரில் சென்று டெங்கு நோயினால் இறந்த சிறுவர்களின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிதி உதவியும் செய்தார். மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களைச் சந்தித்தார்.
26.8.2016 அன்று திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி ஒருவரும், பொதட்டூர் பேட்டையைச் சேர்ந்த தினேஷ் என்ற 2 வயது குழந்தை ஒன்றும் இறந்திருக்கிறார்கள். சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரின் 9 வயது மகள் ஹேமலதாவும் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். ஏன் இன்று வந்த செய்தியில் கூட, கோவையில் 10 மாதக் குழந்தையான பிரசன்னா டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியிருக்கிறான்.
அ.தி.மு.க. அமைச்சர் டெங்கு காய்ச்சலே இங்கே இல்லை என்று மறுத்த போதிலும், தமிழக அரசின் தகவல்படியே 31ஆம் தேதிய விவரப்படி 1,315 பேர் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே அ.தி.மு.க. அரசு இனியும் தவறான தகவலைச் சொல்லித் திசை திருப்பாமல், எதார்த்த நிலை உணர்ந்து, விழித்துக் கொண்டு தமிழகத்தில் டெங்கு உண்மையிலேயே அறவே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு, “டெங்கு” பீதியிலிருந்து பொதுமக்களை விடுவித்திட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.